திங்கள், மே 31, 2010

தற்கொலையின் கோட்டுச் சித்திரம்..

*
தற்கொலையின் வடிவங்கள் விசித்திரமானவை
அவை ஒரு நம்பிக்கையை
கோட்டுச் சித்திரமாய்
வரைந்து பார்க்கின்றன முதலில்

முழுமை பெறாத சித்திரங்களின்
நிராகரிப்பில் உருவாகிறது முதல் எதிர்ப்பு

மௌனக் கணங்களை அமைதியிழக்கச் செய்யும்
இரைச்சலை ஜன்னல் திறந்து
அனுமதிக்கின்றன

பிறகு அவற்றை ஒரு கதவைப் போல
அறைந்து சார்த்திவிடும் இறுக்கத்தை
மேற்கொள்கின்றன

கண்ணாடிக் குடுவையின் அடிப்பாகத்தில்
தேங்கிவிடும் சிறிதளவு தண்ணீரைப் போல
தற்கொலையின் வடிவங்கள்
மிகவும் விசித்திரமானவை

அவை தன் மீது
எந்தவொரு வர்ணங்களையும் பூசிக்கொள்ள
யாதொரு நிமிடத்தையும் அனுமதிப்பதில்லை

புரிதலின் விளிம்பு பிசிர்களை முடிச்சிட்டுப் பழக
அவை வெறுப்பின் விரல்கள் கொண்டு
யாவற்றையும் பின்னிவிடுகின்றன..

எங்கெங்கோ சிக்கலாகி நீர்த்துப்போன
நினைவுகளின் உள்முகங்களை மூர்க்கமாய்
மறுதலிக்கின்றன..

தற்கொலையின் வடிவங்கள் விசித்திரமானவை
அவை
நடந்தேறிய பிறகு தான் தம்மைக் கொஞ்சமாக
வெளிப்படுத்திக் கொள்கின்றன..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மே - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2865

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக