திங்கள், மே 31, 2010

சொன்னதையே சொல்லிக் கொண்டிரு..

*
சொன்னதையே சொல்லிக் கொண்டிரு
என்கிறாய்
எல்லா சந்திப்பிலும்

இதுவரை சொன்னதை
நான் சொல்லிக் கொண்டே இருந்ததை
நீ கேட்டதில்லை என்பதை
ஒப்புக் கொள்ள மறுக்கிறாய்

முன்னமே தெரியும்
என்பதான வாதத்தை முன் வைக்கிறாய்
அந்த வாதம்
ஏற்கனவே விவாதிக்கப்பட்டவை

இல்லை என்கிறாய்

புதிய கோணத்தில் புதிர் முடிச்சுகள்
உட்சிக்கலோடு புதிப்பிக்கப்பட்டிருப்பதாக
நம்பச் சொல்லுகிறாய்

எழுதியத் தீர்ப்புகளை கிழித்துவிட்டு
வந்து நிற்கிறாய்
ஆதாரக் கோப்புகளின் மட்கிய ஏடுகளை
நினைவின் நூல் கொண்டு கோர்த்து நீட்டுகிறாய்

கை நீட்டிப் பெற்றுக் கொள்வதற்குள்
பின்னிழுத்துக் கொள்கிறாய்

திரும்பி நடக்கிறாய்

மறுநாள் வந்து நின்று
சொன்னதையே சொல்லிக் கொண்டிரு
என்று மீண்டும் தொடங்குகிறாய்
நேற்றைப் போலவே..!

****

2 கருத்துகள்: