திங்கள், மே 31, 2010

தீர்ந்துவிடப் போகும் உலகத்தின் மீது..

*
அவள்
தன் கனவுகளை மொழிப்பெயர்க்கிறாள்
ஒவ்வொரு நாள் காலையும்
புதிய வர்ணங்களில்..

அவைகளை
தன் வார்த்தைகள் மீது பூசுகிறாள்

நதியின் சலசலப்பு ஓசையை
அவளால் சேர்க்க முடிகிறது

தேனடைகளின் இனிப்பை

மலைச்சரிவில் உருளும்
சரளைக் கற்களின் சப்தங்களை

உடையும் சருகுகளின் இசையை

நறுமணம் கமழும் மலர்களின்
இதழ் முனை வளைவுகளை

பனித்துளி வழிந்திறங்கும்
அகன்ற இலை நரம்புகளின் பச்சை நிறத்தை

எல்லாவற்றையும்..

காற்றில் விரல் பிடிக்கும் அபிநயங்களுடன்
கண்கள் அகற்றி..

தீர்ந்துவிடப் போகும்
இந்த உலகத்தின் மீது
அவசரமாய் மொழிப்பெயர்க்கிறாள்
ஒவ்வொரு நாள் காலையும்

தன் கனவுப் பை நிரம்பி வழியும்
இரவின் நிழல் தொட்டு..

****

2 கருத்துகள்: