வியாழன், பிப்ரவரி 27, 2014

பின்தொடர்ந்து படியிறங்கும் நிழல்..

*
மிகவும் சாதாரணமாகத் தான்
அது அறிவிக்கப்பட்டது
முதலில் நம்பும்படியாக இல்லை

பிறகு மேற்கொள்ளப்பட்ட சிறு செயல்கள்
உறுதி செய்தன நிறைவேற்றப்படவேண்டிய தீர்மானங்களை

ஒரு வாக்குறுதிக்குள்ளிருந்து வெளியேறும் சொற்கள்
மிச்சம் வைத்துப் போகும் அர்த்தங்கள் வெண்ணிறத்தில்
காணக் கிடைக்கிறது 

அந்தியின் தனிமையை மேஜையில்
நகங்கொண்டு கீறிக் கொண்டிருந்தபோது
அறைக்குள் நுழைந்தது உன் நிழல்

தொட்டுத் திருப்பும் அவகாசத்தை
உடை நுனியில் திருகியபடி நின்றாய்
பெயரிட்டு அழைப்பதில் உண்டான அசூயையை
உதடுகள் சுழித்துக் காட்டின

இப்படியொரு தயக்கத்திற்கு உன்னை நிர்ப்பந்தித்த
செயல் என்னிடம் எதுவென்று
தீவிரமாக யோசித்தபடி இருக்கிறேன்

முத்தப் பரிமாறலோ
ஆரத் தழுவலோ
குறைந்தபட்சம் ஒரு இறுகக் கைப்பற்றலோ
மறுக்கப்பட்ட வெப்பச் சூழலை விரட்டியடிக்க
ஜன்னல் திரைச்சீலையின் ஒரு சிறிய
அசைவு கூட முனையவில்லை

உன்னைப் பின்தொடர்ந்து படியிறங்கும்
உனது நிழல்
பாதி சார்த்திய கதவைத் தொட்டபடி
ஒரே ஒரு கணம் நின்று விட்டு
மீண்டும் உன்னைத் தொடர்கிறது

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூன்  - 11 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5679

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக