வெள்ளி, பிப்ரவரி 28, 2014

நகலாகி மேஜையில் நழுவும் தைல ஓவியங்கள்..

*
ரகசிய சாவிகள் கொண்டு
என்னைப் பூட்டுகிறாய்
இன்னும் திறவாத கதவுகளின்
இலக்கத்தை பரிந்துரைக்கிறாய்
வாசல்களற்ற தனிமைச் சுவரின் முன் நிறுத்துகிறாய்
நீ
என் வழி

அமிலச் சூத்திரங்களை
மனனம் செய்விக்கிறாய்
வார்த்தைகள் கலந்து மொழியொன்றை பொழிய
உன் தருணங்களை எனக்குள் மிதக்க விடுகிறாய்
மௌனத்தை அரிக்கும் அர்த்தக் குமிழ்களை
காரல் நெடியுடன் உடைக்கப் பழக்குகிறாய்
நீ
என் துளி

வளி மண்டலம் பிரித்தனுப்பும் தென்றல் இழைகளை
சிறு சதுர அறை வெளியின் குறுக்கே
இழுத்துக் கட்டுகிறாய்
ஈரம் சொட்டும் துயரங்களை
உதறி உதறி உலர்த்தப் பணிக்கிறாய்
நீ
என் பிரபஞ்சம்

தரவிறக்கம் செய்யச் செய்ய நகலாகி
மேஜையில் நழுவும் தைல ஓவியங்களின்
வர்ணங்களை சிலாகிக்கிறாய்
நவீனச் சிதைவின் குறுக்குத் தோற்றத்தை
அதன் மீது நிர்-நிர்மானம் செய்துக் கொண்டே
கொலாஜ் துண்டுகளை அடுக்கும்படி கட்டளையிடுகிறாய்

எல்லா முகங்களும் ஒரு முகத்துக்குள் சிக்கிக் கொள்வதை
புறத் தோற்றப் புள்ளியிலிருந்து
அக வழிக் கோட்டுக்குள்
உருண்டு விழும் குகைப் பாதையாக்குகிறாய்
நீ
என் அபத்தம்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட்  -27 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5897

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக