வெள்ளி, பிப்ரவரி 28, 2014

இரவை மொழிபெயர்த்தல்..

*
முதல் சூரியனிலிருந்து
ஒரு விள்ளல்
ஜன்னலில் மோதி இரண்டாய் உடைந்து
தரையில் கிடக்கிறது கொஞ்ச நேரமாய்

தூக்கம் கலைந்து ஆவலோடு
எழுந்ததும் வருகிறாள்
அதனிடம் தான்யா

கையிலெடுத்துக் கொண்டு
ஏதோ சொல்கிறாள்
பிறகு
வாயில் போட்டுக் கொண்டு
திரும்பி என்னைப் பார்த்து
இளமஞ்சள் நிறத்தில் சிரிக்கிறாள்

இரண்டாம் சூரியன்
மாலை
தெருவின் கிழக்கில் விரியக் கிடக்கிறது

தினம் அதன் மீது வாகனங்கள் விரைகின்றன
ஒரு முதியவர் தன் ஊன்றுகோல் கொண்டு
தரையோடு அதனைப் புள்ளி புள்ளியாகப் புதைக்கிறார்

பின்
அரச மரத்தின் இலை நிழல்கள்
வடிவம் சிதைந்து அதன் மீது பரவுகின்றது

இரவை
அப்பகலின் இறுதித் துணுக்கு மீது நித்தம்
மொழிபெயர்க்கிறது அம்மரம்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட்  -20 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5884

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக