வெள்ளி, பிப்ரவரி 28, 2014

உச்சரிக்க முடியாத கடவுளின் குரல்

*
சாத்தானின் முணுமுணுப்பு ரீங்கரிக்கும்
சில்வண்டு இரவில்
கடவுளின் செவிகளிரண்டும் கழன்று விழுகிறது
ஆப்பிள் தோட்டத்தில்

இருளும் வெளிச்சமும் உடையும்
விதைகளிலிருந்து முட்டி முளைக்கிறது
சாத்தானின் இரக்கம் ததும்பும் ஓர் இதயம்

அதன் கருணை மிகு பார்வையில்
இதழ் விரிக்கும் சொற்களிலிருந்து காற்றிலேறி ஆடுகிறது
மகரந்த மௌனங்கள்

ஒரு வரம் ஏந்தும் கைகளில்
தனது கண்ணீரை சிந்துகிறான் சாத்தான்
அதன் உப்பு நீர்மையில் உயிர் கரைய வளர்கிறது காமம்

நீல நிறம் கசியும் விஷம் தோய
அந்தகாரத்தில் அடைத்துக் கொள்கிறது
உச்சரிக்க முடியாத கடவுளின் குரல்

அர்த்தப் பிழைகளோடு நம் இருப்பிடம்
வந்து சேரும் சாத்தான்
பிழை திருத்தும் வழியொன்றை யாசிக்கிறான்
கடவுளின் சாயலில்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட்  -13 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5874

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக