வியாழன், பிப்ரவரி 27, 2014

தொங்கும் முகங்கள்..

*
உத்தரவு வரவில்லை
மீண்டும் தொடர்கிறது உன் தலைகுனிவு
நகரும் நொடிகளை வலைப் பின்னிக் கொண்டிருக்கிறது
உனது அறை மூலையில் ஒரு சிலந்தி

ஏதோவொரு புள்ளியில் துளிர்த்திருக்க வேண்டும்
அதிலிருந்து துள்ளி உடைந்திருக்க வேண்டும்
இந்தத் தர்க்கம்

எங்கே எடுத்துக் காட்டு அதன் ரகசிய சாவியை

உன் மௌனச் சுவரில் கணக்கற்று கிடக்கும்
ஏதாவது ஒரு பூட்டில் அது பொருந்த வேண்டும்

துருவேறிய பழமைக் கதவின் பின்னால்
ஏன் தொங்குகிறது உனது முகம்

கலாச்சாரக் கோடுகள் கொண்டு
சட்டம் அடித்து வைத்திருக்கும் வெளியில்
வரைந்துவிட முடியும் ஒரு பின்நவீனத்துவ முகத்தை

தொட முடியாத ஒரு சொல்லை நிரூபிக்க
உதிரக் கூடும் ஒவ்வொரு படிமமாய்
உன் அகாலத்தில்

ஆனால்
உத்தரவு வரவில்லை

****
நன்றி : ( மலைகள்.காம் ) [ஜூன்  - 3 - 2012 ]

http://malaigal.com/?cat=6&paged=36

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக