சனி, ஜனவரி 16, 2016

மீதுள்ள ப்ரியத்தை..



*
சிமெண்ட் பரப்பு உறையும் முன்
எழுத்துக்களை ரத்தம் சொட்ட விடுகிறாய்
சிறு மாம்ச வாடையின் மீது பூசிவிட முடிவெடுக்கிறோம்
சில தீர்மானங்களை

முனை சுருளும் இரவின் நுனியை நெருடியபடி
எழுத நினைக்கும் கனவின் வாசனை
மரணத்தை
தொந்தரவு செய்வதாக இருக்கிறது

நிலவறையின் ரகசியங்களை அறிந்துக்கொள்வதின்
மீதுள்ள ப்ரியத்தை கத்தியைக் கொண்டு துண்டுத் துண்டாக
நறுக்கத் தொடங்குகிறேன்

வெளிச்சம் மங்கிய டைரியின் நாட்பட்ட வரிகள்
படிக்கட்டுகளாக மடங்குகின்றது

இறங்கிச் செல்லும் துணிவின்றி
கவனப்பிசகு போல் வெட்டுப்பட்ட விரல் உகுக்கும் ரத்தப்புள்ளியை
தீண்டும் நாக்கு
உச்சரிக்க மறுக்கிறது அதீதத் தீர்மானங்களை

****

வழிந்து இறங்கும் நேற்றைய யோசனை



*
ஒரு நிமிடம் மறு நிமிடத்தின் மீது வைக்கும் பணயத்தை
வாழ்வியல் பந்தயம் என்பதை
விடாமல் துடித்தபடி ஒப்புக்கொள்ள மறுக்கிற நொடி

தடம் புரளும் நுண்ணிய தமனியின் வழி பாயும் குருதிச் சூட்டில்
குளிர் காய்கிற நேற்றைய யோசனையோடு
 
இக் கணத்தின் முதுகெலும்பில்
இதுவரை எழுதப்பட்ட மௌனத் துளி
வழிந்து இறங்குகிறது
துரோக நிழலாகி
 
காலம் என்பதாக
 
****

குமிழ் உடைய அமிழக் கடவாய்..



*
நரை புரள விரல் நரம்புகள் புடைத்து ஒதுங்கும்
இமைக் கவிழ்ப்பில்
தலைகீழ் தொங்குகிறாய் கலங்கிய பிம்பமாய்

மனமுவந்த சொல்லுக்குள் பெருகி ஓடுகிறது நதி
இலைச் சருகு பற்றும் மணிக்கட்டு உடைந்து கரை வெறுக்கிறேன்

சுழித்திழுக்கும் நீர் வயத்துள் குமிழ் உடைய அமிழக் கடவாய்
என்றொரு அசரீரி
கழுகின் அலகில் கொளுத்துகிறது பரிதியை

உருளும் கற்களின் கரடை உரசுகிற கணு எலும்பின் புடைப்பில் மோதி
அஞ்சி வாய்ப் பிளக்கும் கயலின் விழிக்கோளம்
வர்ணமற்று உகுக்கிறது 180 டிகிரி வளைந்த
உலகின் கண்ணீரை

அழியும் ரேகைகளை புசிக்கும் மஞ்சள் தவளையின்
கீழ்த்தாடை நஞ்சு உப்புகிறது நுரையீரல் சுவரெங்கும்

சுவாசப்பை வீங்கி நிரடிய மணல் துகள் ஈரத்தில்
சற்றை நேரம் வரை நீயிருந்தாய்
தலைகீழ் தொங்கிக் கலங்கும் பிம்பமாய்

*****

ஒரே ஒரு முறை மட்டும்..

*
முதன் முதலாக
நீயுன் இரவை ரகசியமாய் திறந்தது ஏன்


முதன் முதலாக
வெட்டுப்பட்ட விரலில் இருந்து கசியும்
ரத்தத்தை ருசித்தது ஏன்


முதன் முதலாக
உனது ப்ரியத்துக்குரிய உதட்டில் முத்தமிட
துணிந்தது ஏன்


முதன் முதலாக
ஒரு கெட்டவார்த்தையை உச்சரித்துப் பழக
முயன்றது ஏன்


முதன் முதலாக
வெளிச்சம் குறைந்த கதவடைக்கப்பட்ட அறைக்குள்
கிடந்து கதறி கதறி அழுதது ஏன்


முதன் முதலாக
பாடையொன்றை தோளில் ஏற்றி வைத்தபோது
தெருவில் சிதறும் மலர்களுக்காக வருத்தப்பட்டது ஏன்


முதன் முதலாக
நேசத்திற்கினிய தோழி தொடர்ந்து அழைத்தும்
அழைப்பை ஏற்காமல்
செல்போனை தண்ணீருக்குள் விட்டெறிந்தது ஏன்


முதன் முதலாக
ஓர் அந்நிய உடல் மீது உருக்கொண்ட வேட்கையை
என்ன பெயரிட்டு அழைக்கலாம் என யோசித்தது ஏன்


முதன் முதலாக
விருப்பப்பட்டு வாங்கிய நாய்க்குட்டியை
நெரிசல் மிகுந்த சாலையோரம் கைவிட்டது ஏன்


முதன் முதலாக
கைக்கு வந்து சேர்ந்த ஒரு நீண்ட காதல் கடிதத்தை
ஒரு முறை மட்டும் வாசித்து முடித்து நெருப்பிட்டு
எரித்தது ஏன்


முதன் முதலாக
காமத்தை அனுபவிக்க நேர்ந்த இரவில்
வேட்டை மிருகத்தின் தீப்பிழம்பு கண்களை
நினைத்துக் கொண்டது ஏன்


முதன் முதலாக
ஒரு துரோகத்தின் நிழலிலிருந்து மீளத் தெரியாமல்
முகத்தை மடியில் புதைத்துக்கொண்டு
தற்கொலைப் பற்றி யோசித்தது ஏன்


முதன்முதலாக துளிர்த்த
இன்னொரு காதலுக்குள் அவ்வளவு சிலிர்த்தது ஏன்
அந்த முத்தம் அத்தனை இனித்தது ஏன்
ததும்பிய காமத்துக்குள் இருள் குழையக் குழைய மிதந்து ஏன்

 
முதன் முதலாக
உனது ரகசியத்தை நேசிக்க கிடைத்த வாய்ப்பை
பெய்து முடித்த மழையின் கடைசி சொட்டுக்குள்
ஒளித்து வைத்தது ஏன்

****