திங்கள், ஆகஸ்ட் 30, 2010

மூடிய கண் கீற்றைப் பிரித்து நீயென்னைப் பார்த்த கணம்..

*
உன் வருகைக்காகக் பகலில் காத்திருந்த
நொடிதோறும்
சிறு தூறலில் நனைந்திருந்தது இலைகள்..

மேகம் மூடிய வானின் செதில்களில்
பறவைகளின் சிறகுகள் சுமந்து சென்ற
செய்தியொன்றை
நட்சத்திரம் பெற்றுக் கொண்டதை..
இரவில் உணர நேர்ந்தது..

உன்னைத் துணிப் பொதியில்
தாதியொருத்திக் கொண்டு வந்த போது..

நானுன் பால் வாசனை முகர்ந்த நிமிடம்..
நீயுன் இறுக மூடிய கண் கீற்றைப் பிரித்து
என்னைப் பார்த்த கணம்..
என்ன யோசித்தாய்..?

உன்
குட்டிக் கை விரல்களுக்குள் சேமித்து வைத்திருக்கும்
நம் ரகசியத்தை
எப்போது என்னோடு பகிரப் போகிறாய்..?

*****
( 25.8.2010 இரவு பிறந்திருக்கும் என் மகளுக்காக.. )

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஆகஸ்ட் - 2010 )

சுவற்றிலிருந்து சலனமற்று நோக்கும்...ஓவியக் கண்கள்..!

*
சற்று முன் பேசிய வார்த்தைகள்
டைனிங் டேபிள் பரப்பெங்கும்
இறைந்து கிடக்கிறது..

அவை பசித்திருக்கவும் கூடும்..

குறை நீர்க் கண்ணாடி டம்ளரின்
விளிம்பில் வந்தமரும் ஈயொன்று
உதடுகளின் முணுமுணுப்புகளை..
அதன்
ரேகை வரிகளில் வாசித்து
எங்கோ பறந்து செல்கிறது
யாரிடமோ சொல்ல..

மேஜை விரிப்பின் ஒரு மூலையில் பின்னப்பட்ட
ஒற்றை ரோஜாப் பூ..
பச்சை இலைகளற்று..தொங்கியபடி காற்றிலசைவதை
குறிப்பெடுக்கிறது..
சுவற்றிலிருந்து சலனமற்று நோக்கும்
ஓவியக் கண்கள்..

உணவு அருந்தும் அறையெங்கும்..
உரையாடல்கள் உறைந்து
குளிர்கின்றன..
அதிகப்படியான ஏ.சியால்..

மனிதர்கள்.. புழுக்கம் சேகரிக்க
வாசல்வரை சென்றுவிட்டனர்..
யாரையோ வழியனுப்பும் பொருட்டு..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஆகஸ்ட் -11- 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=10365&Itemid=139

மழைத் தருணங்கள்..

*
மழை மீதான
மேல்முறையீட்டில்
வெயிலின் கருணை மனு நிராகரிக்கப்படுவதோடு...

இருளின் சத்தியங்களை
அலட்சியமாக மீறுகின்றன
ஆளரவமற்ற தெரு விளக்குகள்..

வாழ்வதாக சொல்லும் தருணங்களையெல்லாம்
சுழித்துக் கொண்டு ஓடுவதாகத் தோன்றுகிறது
நகரத்து மழையின் கசடுகள்..

மனச் சதுக்கத்தின்
மத்தியில்
கையகலக் குழிப் பறித்து..அடித்தளம் பூசும் வெயில் மீது..
கொஞ்சமாய்த் தங்கிவிடுகிறது
மழைத் தருணங்களின் வண்டல்கள்..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஆகஸ்ட் - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=10280&Itemid=139

இன்னுமொரு கோள்..

*
என்னை விட்டு வெளியேறிடும்
நிலவை
தொலைத்தூர இருளில்
கண்சிமிட்டி அழைத்துக் கொண்டது
ஒரு
நட்சத்திரம்..

பார்த்தவுடன்
பற்றி எரியும் நெருப்புக் குழம்பில்
விழுந்து..குளிர்ந்து..
இன்னுமொரு கோளாகி..
எனக்குள் நுழைந்துவிட..

காத்துக் கிடக்கிறது...
பல யுகங்களாய்..

கிடக்கட்டும்..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஆகஸ்ட் -19- 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=10481&Itemid=139

நீலவேணி - ஒன்பதாம் வகுப்பு 'பி' பிரிவு..

*
நீலவேணி
என் கவனங்களை
எப்போதும் தன்னோடு
எடுத்துப் போகிறவளாகவே இருந்திருக்கிறாள்..

ஒன்பதாம் வகுப்பு 'பி' பிரிவுக்கு பிறகு
என்னிலிருந்து காணாமல் போனாள்..

சென்ற மாதம்
மழை நாளொன்றில்..

ஜி.எச். மருத்துவமனை
கான்ஸர் பிரிவை
நான் கடந்த
ஒரு
மதிய வேளை..

என்னிடம் பேனா கேட்டு
எதையோ குறித்துக் கொண்டு
திருப்பித் தந்த போதும்

என்
அடர் மீசை தாடியின்
அடையாள இழப்பிலும்..

மீண்டும்
என் கவனங்களை
தன்னோடு எடுத்துப் போகிறவளாக இருக்கிறாள்
நீலவேணி..

****

வெள்ளி, ஜூலை 30, 2010

சுழலும் தனிமை அறை..

*
இத்தனிமை அறையில்
மௌன நிழலென
சுழல்வதையே

ஒரு
பழக்கமாக வைத்திருக்கிறது

இந்த
மின்விசிறி..

****

உதிரும் வர்ணங்களில்..

*
பிரியத்தின்
சிதறலில்

உதிரும் வர்ணங்களில்

இழைகிறது
நட்பெனும் ஈரம்..

****

மரணத்தின் ஈரச் சிறகுகளில் சொட்டும் நிழல்த் துளிகள் ..

*
துர்க் கனவொன்றின்
விரல் பிடித்துப் பறந்த இரவில்

மரணத்தின் ஈரச் சிறகுகளில்
சொட்டிய
நிழல் துளிகளைப்
பருகித் திமிறுகிறது

இதுவரை
பாடப்படாத
துக்கத்தின் குரல்..!

****

தனித்து தேங்குதல்..

*
எல்லா அடிக்குறிப்புகளிலும்
தனித்து
தேங்கிவிடுகிறது

கவிதைக்குள்
வடிக்கட்டப்பட்டுவிடும்
ஒரு
படிமம்

****

என்றேன்..என்றாள்..

*
'முடிவாக என்ன சொல்லுகிறாய்..? - என்றாள்

'முடிந்ததாக தெரியவில்லை ' - என்றேன்

'சரி..! இனி எனக்கு கால் பண்ணாதே ' - என்றபடி
ஸ்கூட்டியை கோபமாய் முறுக்கி
வேகமாய் டிராபிக்கில் கலந்துவிட்டாள்..

ஸ்கூட்டி ஓட்டும் பெண்கள் மொத்தமும்
அவளாகவே தெரிகிறார்கள்..!

****