திங்கள், ஏப்ரல் 13, 2009

உன் அசைவுகளின் நிழல்..

*

குத்திட்டு உள்ளேகும் பார்வையில்..
கூர் தீட்டி வைத்திருக்கிறாய்
ஒரு கனவை..

என்
நினைவுச் சுரப்பியின் ஊற்றுக்களில்..
எப்போதும்..
மிதக்கிறது உன் முகம்.

அசைவுகளின் நிழலில்
துணைக்கு
வால் சுருட்டிப் படுத்துவிடுகிறது..
என்னோடு..
உன் புன்னகை..

தொலைவில்..
கடுகென
உன் உருவம் கண்டதும்..

தரையிலிருந்து..
எம்பும் ஒரு பறவையின்
சிறகைப் போல்..

கடலலை நெளிகளில்..
குதிக்கும்...
நூறு நிலவுகள்..!

என்னைப் பார்க்கும் நொடிகளில்..
சிவக்கும் உன் காது மடலில்..
உதிக்க தவறுவதில்லை..
ஒரு
வெட்கச் சூரியன்..!

வீட்டிலிருந்தே..
உதடுகளுக்குள்
பொட்டலம் கட்டிவிடும்
முத்தங்களை..

கடற்கரை
மணல் தட்டி..
கிளம்ப யத்தனிக்கும்..
கணத்தில் தான்..
பரிசாகக் கொடுக்கிறாய்..
எப்போதும்..!

*****

மெரீனா..பூமி..!

*

காரோ பைக்கோ..
மனிதர்கள் வந்தபடியே இருக்கிறார்கள்..
ஏதாவது ஒரு விதத்தில்..

எப்படியும்...

பூமியில்..
காலை ஊன்றாமல்...
எதுவும் நடப்பதில்லை..

******

சனி, ஏப்ரல் 11, 2009

நுன்னியப் புள்ளிகள்...

*

பந்தாய் சுருன்டெழும்..
நினைவின் நிழலில்..
கைப்பிடிப் புன்னகையொன்று
ஆழமாய் புதைந்துக் கிடக்குமோ..!

நிலவின்
முனை உடைந்தப் பள்ளங்களில்..
தேக்கம் கண்ட..
வெயிலின்..வாசம்..
என் இரவில்...
நட்சத்திரமாய்...உதிர்கிறது..

அசையும்...பெயர் தெரியா
மரத்தின் இலைகளில்..
மெழுகாய்ப் பூசிப் போகிறாய்..
உன் பார்வைகளை...

மனசின்
வேர் நுனிவரை..பரவும்..
ஈரக் கணங்களை..
எளிதில் கடக்கும் விதமாக...
எப்போதும் அமைவதில்லை...
உன் வருகை..

விம்மிக் கசங்கும்..
பொழுதுகளின்..முதுகில்..
நேற்றைய இரவின்
கண்ணீர்த் துளியொன்று..
பாம்பாய் நெளிகிறது..

வீசும்
தென்றலின் பிடரியெங்கும்..
நுன்னியப் புள்ளிகளாய்...
வியர்க்கிறது..
உன் மௌனம்..!

******

வெள்ளி, ஏப்ரல் 10, 2009

நதிக்கரையின்..கூழாங்கற்கள்..!

*
நீர்க் கோர்வைகளின்..
அலை அடுக்குகளில்..
குமிழ்விட்டோடுகிறது...
நாம் சிந்திய வார்த்தைகள்..

நதிக்கரையோரம்...
மணல் படுகை நெடுகே..
நெளிந்து நிற்கும் நாணல் நுனிகளில்..

பிசிர் பறக்க.. தலையசைக்கும்..
நம் சிரிப்பொலி..

இலையுதிர்கால மரமொன்றின்..
கருமைக் கிளைகளில்...பொதிந்திருக்கும்...
பெயர் அறியா பறவையின் கூட்டில்..

அடைகாக்கப் படலாம்..
நம் கவிதைகள்.

சிறகு முளைக்கும் பருவத்தை..
எதிர் நோக்கி..
இறுகப் பற்றிய...
என் உள்ளங்கை வெப்பத்தில்..

கனன்று முளைவிடுகிறது உன் நம்பிக்கை..

காதோரக் குழல் ஒதுக்கி..
வில்கூர் புருவ முனை உயர்த்தும் அழகில்..

அந்தி வானில் ஒளித்தீட்டக்
கிளம்பக்கூடும் ஒரு நட்ச்சத்திரம்..

எதிர் வரும் குளிர் இரவின்..
நிழல் விரல்கள்...
தீண்டத் தவிக்கும் நம் பொழுதை..
பத்திரமாய்...சுமக்கும்படி..

நதிக்கரையின்..
கூழாங்கற்களைக் கேட்டுக்கொள்வோம்..

வா..!
மண்டியிட்டு...
நதியை..முத்தமிடலாம்..

*******

சனி, ஏப்ரல் 04, 2009

மௌன நாளொன்றில்..

*

மௌனமாய்..
உன்னிடம்
கை குலுக்கிய
நாளொன்றின்..
இரவு வானில்

சட்டென்று
ஓர்
எரி நட்ச்சத்திரம்
சிரித்துக்
கடந்தது..

*****

நழுவும் நீர்த்துளி..!

*

குழந்தை
கைக் கழுவிய
தண்ணீர் 'பக்கெட்டுக்குள்..'

உப்பிக் கிடக்கும்
'சோற்றுப் பருக்கைகளை '

'சொட்டு... சொட்டென்று..'

மௌனத்தால்..
அளக்கிறது..

குழாயில்..
நழுவும்
நீர்த்துளி..!

*****

ஒரு புன்னகை..

*

குயவன்
விரல் நேர்த்தியோடு..
வனைய
முயல்கிறேன்..
உன்
புன்னகையை..

குழையும்
எழுத்துக்களோ..
ஈரப்
பிசுப்பிசுப்போடு..
ஒட்டிக் கொள்கிறது..
காகிதத்தில்..

*****

கால யந்திரம்..

*

கால் முளைத்த
பழங்காலத்து..
சமையல் யந்திரம்..
இன்றும்
நிற்கிறது..

நம்
நவீன
சமையலறைகளில்..

அம்மாவாய்..
மனைவியாய்..
மகளாய்..

சமயத்தில்..
கிழவியாகவும்..!

*****

வார்த்தைகள்..

*
வலுவற்ற
பூகம்பம் ஒன்றை
புதைத்து வைத்திருக்கிறாய்
மௌனத்தில்..

வார்த்தைகள்
உடைந்து விழுகின்றன
என்
தாளில்..!

*****

புதன், ஏப்ரல் 01, 2009

எங்கள் ' சே' வும் 'பிடலும்'..

*

எங்கள்
'சே' -வும்
'பிடலும்'

அலைந்துத் திரிந்த..
காட்டில்..

வெடிக்கும்
துப்பாக்கி முனையின்..
இளஞ்சூட்டில்..

பட்டாம்பூச்சிகளுக்கு..
இடமில்லை..!

******