புதன், ஏப்ரல் 30, 2014

ஆதி டி.என்.ஏ -க்களின் பழைய உச்சரிப்பு

*
ஓர் அலைபேசியின் வழியே மிதந்து வரும் உன் குரலை
கைப்பற்றுகிறது என் புலனுணர்வு

நிற்காத பேரிரைச்சலின் கூர்ந்த கவனிப்புக்கு ஊடே
மொழியின் தளும்புதலில் நுரைக்கும் சொற்கள் செறிவுறும் அர்த்தச் சுவையின்
உப்புத்தன்மை பூசிய பதிலிகளோடு திருப்பி அனுப்பும் அலை
உன்னைத் தொடும் முன்பு
சாட்டிலைட் இழுத்துவிடும் பெருமூச்சாகிறது ஒலி அளவு

ஒரு சொல்லை இன்னொரு சொல் முந்துவதும் பின்னடைவதுமான
விளையாட்டாகி நகரும் வாக்கியங்களைக் கடக்கும் விண்கற்களில்
கல்வெட்டாகிப் புதைந்த ஆதிச் சொற்கள்
தன் சாயலொன்றை ஏற்றி அனுப்பிடும் சூக்குமங்களாக

அதிநவீனமாகிவிட்ட அலைஒலி ஈர்ப்புக் கருவியின் ஆன்ட்டனாக்கள்
உனக்கும் எனக்குமான உரையாடலை பின்நவீனப்படுத்தி நம்மிடம் கடத்துவதை
நம் பரஸ்பர குற்றச்சாட்டுகளுக்கான சாட்சியமாவதில்லை
எந்தவொரு உற்றுநோக்குதலோ
மூன்றாம் நபர் பஞ்சாயத்தோ

நேசிக்கிறேன் வெறுக்கிறேன் துயர் அழுத்தும் தனிமையில் புதைகிறேன்
இவைகளோடு அசையும் அறை ஜன்னலின் திரைச்சீலையில்
கொடிப்பிடித்து வளரும் மலர்கள் அறிந்திருக்கும்
யாவும்
ஒரு சொல்லின் மீதான வெயில் படரும் விளைவு மட்டுமல்ல
தலைமுறைகளை சுமந்து உழலும் ஆதி டி.என்.ஏ -க்களின்
பழைய உச்சரிப்பு
இந்த நிழலென்ற பைத்தியக் கணம்

*****

நன்றி : ' யாவரும். காம் ' இணைய இதழ் [ நவம்பர் - 20 - 2013 ]

http://www.yaavarum.com/archives/1622

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக