திங்கள், ஏப்ரல் 14, 2014

ஓர் அபத்த நாடகத்தின் முதல் காட்சி..

*
யாரோடும் சமரசமில்லை
எந்த சந்தர்ப்பங்களுடனும் உடன்படிக்கையில்லை

உப்புப் பூத்துவிடும் நம்பிக்கைகளை
கொய்யும் விரல்களோடு சிநேகம் இல்லை

சந்தேகக் கண்ணிலிருந்து கீழிறங்கும் நிறங்களில்
தொங்கும் சம்பவங்களின் திரை மடிப்பில்
சிக்கித் தவிக்கும் மூச்சுக்காற்றில் உயிர் இல்லை

மரணத்துக்கான ஒத்திகையில்
பார்வையாளர் பகுதியிலிருந்து வீசப்படும்
ஒற்றைக் கயிற்றில் தொடங்குகிறது
ஓர் அபத்த நாடகத்தின் முதல் காட்சி

மேடையேறத் துடிக்கும் கால்கள் ஒவ்வொன்றும்
பந்தாடுகிறது உணர்ச்சித் தருணங்களை

மைதானமென விரியும் எல்லையற்ற அக்காட்சியில்
குறுக்கும் நெடுக்குமாக சதா உலவுகின்றன
நம்பிக்கைகளும்
அதன் வாலாகிப் போன துரோகங்களும்

****


நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஜூன் - 17 - 2013 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/24176-2013-06-18-07-23-13
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக