செவ்வாய், ஏப்ரல் 29, 2014

உன் வசமிருக்கும் நிழல் துண்டை வெட்டி எடு..

*
ஒரு பிடிவாதத்தைக் கைவிடுவது என்பது முடியாத காரியம்
ஒரு மௌனத்தை விலை பேசுவதென்பது கடினமான காரியம்
ஒரு துயரத்தை பணயம் வைப்பது என்பது பந்தயம்
நீயாகிய இருப்பை இல்லாமல் செய்வது என்பது தற்கொலை

பேச்சுவார்த்தை நோக்கி விடுக்கும் அழைப்பை மறுதலித்து
ஒற்றை சூட்சுமத்தின் இலைத்துடிப்பு

அந்தரங்கத்தின் நிழல் பகுதியாகி முளைக்கும் விஷச் செடியில் பூக்கும்
கணங்களின் நறுமணத்தை சுவாசிக்கும் கரிசனம்
எனக்கு வாய்த்திருக்கிறது

வெயிலடித்துக் கொண்டிருக்கும் நம் சந்தையின் நடைபாதையில்
விலைபோகும் மௌனங்களின் துயரத்தை பேரம் பேச
உன் வசமிருக்கும் நிழல் துண்டை வெட்டி நடு
பணயமோ பிடிவாதமோ
கைவிடுதல் என்பது முடியாத காரியம்

தற்கொலைப் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசிக்கொள்வோம்
துணைக்கு இரண்டொரு ஆட்கள் சேரட்டும்

உபயோகமற்றுப் போன பழைய உரையாடல்களை
பரணிலிருந்து இறக்கி வைக்க யாரையாவது அனுப்பிவை
அது இப்போதைய உபரித் தேவை

நீயாகிய இருப்பை இல்லாமல் செய்வதென்பது முட்டாள்த்தனம்
பேரத்தைக் கவனி

*****

நன்றி : ' யாவரும். காம் ' இணைய இதழ் [ நவம்பர் - 20 - 2013 ]

http://www.yaavarum.com/archives/1622

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக