திங்கள், நவம்பர் 22, 2010

இரவின் ரகசிய கூடுகள்..

*
ஜன்னல் கம்பிகளை
இந்த நிலா வெளிச்சம்
ஏன்
கோடுகளாக்குகிறது..

முருங்கை மரத்தின்
இலை நிழல்களும் சேர்ந்து
கும்மாளமடிக்கிறது

காற்று உலுக்கும் தன்
சிறு மஞ்சள் மலர்களைப் பற்றி
என் ஜன்னல் திண்டில்
அவை தூவும் புகார்களை

விடியலில் வரும் வாடிக்கை அணில்கள்
கவர்ந்து போகின்றன
தம் ரகசிய கூடுகளுக்கு

கிளையில் அமர்ந்து
இந்த ஜன்னல் வழியே
என்
அறை சுவற்றின்
கடிகார நொடி முள்ளின் நகர்தலை
பின் ஜாமம் வரை வேடிக்கைப் பார்த்து விட்டு

பறந்து விடுகிறது
ஓர் ஆந்தை

என்
ஜன்னல் கம்பிகளை
இந்த நிலா வெளிச்சம்
ஏன்
கோடுகளாக்குகிறது..!?

****

6 கருத்துகள்:

  1. மிக்க நன்றி...திரு ஜெயராம்..

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமையாக இருக்கின்றன் உங்களின் கவிதைகள். தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. இளங்கோ, கடைசி பராவின் மூலம் நிலவின் வெளிச்சம் என்ற இயற்கை உங்கள் மனத்தடைகளை அல்லது கவலைகளை தாண்டிச் செல்லும் அளவுக்கு இலகுவாக்கி விட்டதாகவும் , அதற்கு இக்கவிதையே சாட்சியாகவும் எடுத்துக் கொள்ளச் சொல்கிறீர்களோ?

    பதிலளிநீக்கு
  4. நன்றி..!

    கனாக்காதலன் / கோநா / இராஜராஜேஸ்வரி

    பதிலளிநீக்கு