சனி, மார்ச் 28, 2009

விடுபடும் வழியற்று

*

முதுமைப் பொழுதின்..
பிசிர் கணங்களை..
விரல்கள் நெருடிப் பார்க்கின்றன.

தடித்துவிட்ட
ரேகைகளுக்கிடையே..
தடுமாறும்
சில ஞாபகங்கள்..

ஓய்ந்துப் போன
வேட்டைத் துப்பாக்கியின்
ஈயச் சுக்கானாய்..
நினைவுகள்
துருவேறி விட்டன..

சுருங்கிவிட்ட..
இமைகளுக்குக் கீழே..
இன்னும் பதுங்கிக் கிடக்கிறது..
இறந்த கால நிழல் ஒன்று..

குரூரத்தின்..
பல்லிடுக்கில்..
விடுபடும் வழியற்று..
சிறு மாமிசத் துண்டாய்..
பால்யம்..

நகரும்..
வெய்யிலில்..காய்கிறது..
என் ஈரம்..

உடையற்ற..
தன் இடுப்பை அசைத்து
பழிப்புக் காட்டும் சிறுவனைப் போல்..
முன் நெற்றியில்
ஆடிக்கொண்டே இருக்கிறது நரை..!


*******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக