சனி, மார்ச் 28, 2009

எறும்பு ஊறும் திண்ணை...

*

அவருக்காகக் காத்திருந்த..
திண்ணையில்..

சாக்பீசால்
கிறுக்கியத் தாயக் கட்டங்கள்..
நிரந்தர பல்லாங்குழிக்குள்..
புதைந்து கிடந்தன..

அவருக்காகக் காத்திருந்த
திண்ணையில்..

அவ்வீட்டுப் பெண்டுகளின்..
சிரிப்பொலி
படிந்துவிட்ட..
சிமென்ட் சொரசொரப்பில்..
மெல்ல ஊரும் எறும்பை..

பட்டை வெயிலொன்று
துரத்திச் சென்றது..

அவருக்காகக் காத்திருந்த
திண்ணைப் பக்கம்..

ஆட்டுரலொன்றில்...
கட்டப்பட்டிருந்த..
ஆடு..
இலைகளை மென்றுக் கொண்டிருந்தது..

அவருக்காகக் காத்திருந்த
திண்ணைக் கெதிரே..

கோழிகளின்
கால் பிறான்டலில்..
இரைத் தேடினக் குஞ்சுகள்..

அவருக்காகக் காத்திருந்த
திண்ணைக்கு வடக்குப் பக்கம்..

ஒற்றை
ஒடை மரத்துக்கடியில்..
யாருமற்ற கயிற்றுக் கட்டிலில்..
கால் நீட்டிப் படுத்துக் கிடந்தது..
சொற்ப நிழல் ஒன்றும்..!

இப்போது..
இலைகள் தீர்ந்த..
ஆடு..
என் நேரத்தையும்..
சேர்த்தே..மெல்லுகிறது..

அவருக்காகக் காத்திருந்த
திண்ணையில்..

குடித்து..
எட்ட வைத்த..
மோர் டம்ளரின்..
விளிம்புக்குள்ளிருந்து..

கொத்துமல்லி....
இலையொன்றும்..
எட்டிப் பார்த்துக்
கொண்டேயிருக்கிறது...
வாசலை..

அவருக்காக...
திண்ணையில் காத்திருக்கிறேன்..!


******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக